அள்ளித்தரும் கொத்தமல்லி!

“விதையைப் போட்டால் பயிர் வளர்ந்து விட வேண்டும். அதுவும் குறைவான நாட்களில் நிறைவான வருமானத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட பயிர்களைத்தான் விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு கொத்தமல்லி, கீரைகள், புதினா போன்றவை நல்ல சாய்ஸ். விவசாயத்தில் எதுவுமே தெரியாதவர்கள்கூட இதுபோன்ற பயிர்களை எளிதில் சாகுபடி செய்யலாம். சில எளிமையான நுட்பங்களைத் தெரிந்துகொண்டாலே போதும். இந்தப் பயிர்களில் ரிஸ்க் கம்மி, லாபம் நிச்சயம்’’ என பேச ஆரம்பித்தார் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயியான சபரிநாதன். தனது அரை ஏக்கர் நிலத்தில் கீரை மற்றும் கொத்தமல்லியை சுழற்சிமுறையில் சாகுபடி செய்துவரும் இவர் இந்தப் பயிர்களில் கணிசமான லாபத்தையும் தொடர்ச்சியாக பார்த்து வருகிறார். ஒரு காலை வேளையில் அவரது வயலுக்கு சென்றிருந்தோம். நம்மை வரவேற்று மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

நான் தொடர்ந்து கீரை, கொத்தமல்லி ஆகிய பயிர்களையே மாற்றி சாகுபடி செய்கிறேன். இந்த விவசாயத்தில் பரா மரிப்பு வேலைகள் மிக எளிதாக இருக்கிறது. குறைந்த நிலத்தில்கூட இவற்றைப் பயிரிடலாம். குறைந்த நாளிலேயே அறுவடை செய்து காசு பார்க்கலாம். கொத்தமல்லியை சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதி கொண்ட நிலமாக இருந்தால் தோதாக இருக்கும். அதிலும் ஆடிப்பட்டம் சிறந்ததாக இருக்கும். நிலத்தை நன்றாக இரண்டுமுறை உழவு ஓட்ட வேண்டும். பிறகு ஏக்கருக்கு 2 கிலோ நுண்ணுயிர் உரங்களால் ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தைக் கொட்டி கலைத்துவிட வேண்டும். மூன்றாவது உழவின்போது ரோட்டேவேட்டரால் ஓட்டி மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைத்தால் பயிர்கள் நன்றாக முளைத்து பலன் தரும்.

தண்ணீர்ப் பாசனத்திற்கு ஏற்றவாறு சதுரப் பாத்திகள் அல்லது மேட்டுப்பாத்திகள் அமைப்பது நல்லது. இவ்வாறு அமைத்த பின்பு விதைகளை மணலில் கலந்து தூவிவிடலாம். அல்லது5 அங்குல இடைவெளியில் விதைகளை நடவு செய்யலாம். அரை ஏக்கரில் கொத்தமல்லியை சாகுபடி செய்ய 10 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைத்தால் 800 முதல் 1000 கட்டுகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ விதைகளை விதைப்பதற்கு 5 முதல் 8 சென்ட் இடம் போதுமானது. விதைத்ததில் இருந்து 7-10 நாட்களில் விதைகள் முளைத்து பயிர் வெளியே வரும். அப்போது வாய்க்கால் பாசனமுறை அல்லது தெளிப்புநீர்ப் பாசன முறை என்று தேவைக்கேற்றவாறு பாசன முறையை அமைத்துக்கொள்ளலாம். அதிக தண்ணீர் பாய்ச்சக்கூடாது. நிலத்தை ஈரப்படுத்திக்கொண்டேவந்தால் போதும். 10வது நாளில் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து 20 முதல் 30ம் நாட்களிலும் ஜீவாமிர்தத்தைக் கொடுத்து வரவேண்டும். 15ம் நாளில் ஒரு லிட்டருக்கு 300 மில்லி என்றஅளவில் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால் ஐந்திலைக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற கணக்கில் கலந்து தெளிக்கலாம்.

கொத்தமல்லி, கீரை போன்ற பயிர் களில் வரும் முக்கிய பிரச்னை வேரழுகல் நோய்தான். இதை கட்டுப்படுத்துவதற்கு 3 எளிய வழிமுறைகள் இருக்கின்றன. அதைச் செய்தாலே போதும். கொத்தமல்லி மற்றும் கீரைச்சாகுபடியில் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். கொத்தமல்லி, கீரைக்கு உழவு ஓட்டிவிட்டு அடியுரமாக எரு (தொழுவுரம்) கொடுப்பது விவசாயி களின் வழக்கமாக இருக்கிறது. அதில் உள்ள சின்ன சின்ன புழுக்களால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதை பெரும்பான்மையான விவசாயிகள் கண்டுகொள்வதில்லை. இதற்குத் தீர்வு எருவோடு நுண்ணுயிர் உரங்களைக் கலந்து கொடுப்பதுதான். இப்படி நுண்ணுயிர் உரங்களைக் கலந்து கொடுக்கும்போது பிரச்னை தீரும். அதாவது அரை ஏக்கர் கொத்தமல்லி சாகுபடிக்கு 1,000 கிலோ (ஒரு டன்) எருவுடன் தலா 5 கிலோ சூடோமோனாஸ், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து லேசாக தண்ணீர் தெளித்து ஒருநாள் நிழலில் வைத்து கொடுத்தால் வேரழுகல் நோய் வராது. இது கொத்தமல்லிக்கு மட்டுமில்லை. கீரைகளுக்கும் பொருந்தும். 2வது, தொடர்ந்து ஒரே நிலத்தில் கொத்தமல்லியே சாகுபடி செய்யக்கூடாது. சுழற்சிமுறையில் வேறுவேறு பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். 3வது, ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் சாகுபடி செய்வதற்கான இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மாதமாவது இருக்க வேண்டும். இதை சரியாககடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு பராமரிப்புப் பணிகளை செய்து வரும் நிலையில், 35வது நாளுக்கு மேல் பயிர்கள் அறுவடைக்குத் தயாராகும். நாம் 40 நாளில் அறுவடை செய்து விடலாம். வயலில் உள்ள ஒவ்வொரு பாத்தியிலும் வெவ்வேறு நாட்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம். இதனால் நாம்தொடர்ச்சியாக அறுவடை எடுக்கமுடியும். ஆனால் 50 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் போனால் செடிகள் முற்றிய நிலைக்குச் சென்றுவிடும். அரை ஏக்கரில் மொத்தமாக 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கட்டுகள் வரை மகசூலாக கிடைக்கும். இந்தக் கட்டுகளை, கீரைக்கட்டு போல பெரிய கட்டாக கட்டி விற்பனை செய்யலாம். அருகில் உள்ள சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தால் ஒரு கட்டுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை கிடைக்கும். சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் ஒரு கட்டு ரூ.30 கூட கிடைக்கும். அரை ஏக்கரில் எப்படியும் சராசரியாக 5 ஆயிரம் கட்டுகள் மகசூலாக கிடைக்கும்.

அறுவடை செய்த கட்டுகளை நாங்கள் வாணியம்பாடி உழவர் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறோம். அங்கு ஒரு கட்டு குறைந்தபட்சம் ரூ.10 என விற்க முடிகிறது. சில நாட்களில் ரூ.20, ரூ.30 என கூட விலை போகும். இன்னும் சில நாட்கள் போனால் ஒரு கட்டுக்கு ரூ.100 என கூட விலை கிடைக்கும். வெயில் அதிகமானால் செடிகள் சரியாக வராது. அப்போது டிமாண்ட் ஏற்பட்டு விலை எகிறும். மழைக்காலங்களில் செடிகள் அழுகி வீணாகும். அப்போதும் டிமாண்ட் ஏற்பட்டு விலை அதிகமாகக் கிடைக்கும். நான் சராசரியாக ஒரு கட்டு ரூ.10 என விற்பனை செய்தாலே ரூ.50 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். அதில் உழவு, விதை, பராமரிப்பு என அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் செலவு போனாலும் ரூ.35 ஆயிரம் லாபமாக கிடைக்கும். 50 நாளில், அரை ஏக்கரில் இது நல்ல லாபம்தானே! கீரைக்கும் ஏறத்தாழ இதே வருமானம் கிடைக்கும். சற்றே கூடுதலாக வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சபரிநாதன்: 96550 30156

 

Related posts

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைப்பு

சென்னையில் ஏடிஎம் மையம் வந்த வியாபாரியிடம் பணம் பறிப்பு!!

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!