அரியலூர் -கடலூர் மாவட்டங்களை இணைக்கும் சிலுப்பனூர்-பொன்னேரியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

பெண்ணாடம் : அரியலூர்- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் சிலுப்பனூர்- பொன்னேரியில் உள்ள தரைப்பாலத்தை சீரமைத்து மேம்பாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் பகுதியாக சிலுப்பனூர்-பொன்னேரி (பெண்ணாடம்) பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டு தற்போது அந்த பாலத்தை அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் உள்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த வழியாக பள்ளிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களும், வேலைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலுப்பனூர் வெள்ளாற்றில் மணல்குவாரி துவங்கப்பட்டதால் இந்த வழியாக பல்லாயிரக்கணக்கான லாரிகள் அந்த பாலத்தில் சென்று வருகிறது. இதனால் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. மேலும் பாலத்தில் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டம் தளவாய் பகுதியில் இயங்கும் சிமெண்ட் ஆலைகளில் இருந்து சிமெண்ட் லாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த பாலம் வழியாக கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இதனாலும் பாலம் சேதமடைந்து வருகிறது. இதனால் இந்த பாலத்தில் தினம் தினம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் திக் திக் பயணத்தில் செல்லும் நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் நலன்கருதி தமிழக அரசு சிலுப்பனூர்-பொன்னேரி (பெண்ணாடம்) வெள்ளாறு தரைப்பாலத்தை சீர்செய்து மேம்பாலமாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்