சுற்றுலா பயணிகள் அச்சமின்றி குளிக்கும் வகையில் பாலருவி நீர்வழிப்பாதையில் கான்கிரீட் தளப்பணி துவக்கம்: கேரள வனத்துறை நடவடிக்கை

செங்கோட்டை: சுற்றுலா பயணிகள் எவ்வித பயமுமின்றி குளிக்கும் வகையில் பாலருவி நீர்வழிப்பாதையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளதாக கேரள வனத்துறை அதிகாரி தெரிவித்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக – கேரளாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதியாக மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது.

இப்பகுதியில் கேரள மாநிலம் ஆரியங்காவு அருகே இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியில் பாலருவி அமைந்துள்ளது. 300 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் பாலருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு வந்து செல்வார்கள்.
இந்த அருவியில் குளிப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ.50 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.30, பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது.

வன விலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் பாலருவியில் விழும் குறைந்த அளவு தண்ணீரை குடிக்க அடிக்கடி அருவி பகுதிக்கு செல்வது வழக்கம். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலருவி தற்காலிகமாக மூடப்பட்டது. குற்றால சீசன் காலமான ஜூன், ஜூலை மாதத்தில் மீண்டும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அப்போதுதான் இந்த அருவி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வசதியாக அருவியின் இருபுறங்களில் அதிக பள்ளமான இடங்களை குறைக்கும் விதமாக பள்ளங்களில் சிமெண்ட் மூலம் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் பொதுமக்கள் இங்கு பள்ளங்கள் இருக்குமோ என்கிற பயமின்றி பாலருவியில் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று கேரள வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: கோடை விழா ஏற்பாடு தீவிரம்