திரைப்பட இயக்குனரின் நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் எடுத்து சென்றதாக உதவி இயக்குனர் மீது புகார்

பூந்தமல்லி: திரைப்பட இயக்குனருக்கு சொந்தமான நகையை அடகு வைத்து கிடைத்த ரூ.3 லட்சத்தை எடுத்துச் சென்றதாக உதவி இயக்குனர் மீது இயக்குனர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இவர் அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். இவரிடம் கடந்த 2018ம் ஆண்டு முதல் உதவி இயக்குனராக முகமது இக்பால் என்பவர் பணியாற்றி வருகிறார். தேசிங்கு பெரியசாமியின் வரவு, செலவு மற்றும் பணப் பரிவர்த்தனைகளையும் இவர் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம், தேசிங்கு பெரியசாமி தனது 150 கிராம் எடை கொண்ட தங்க நகையை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து, பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறியுள்ளார்.நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து ரூ.3 லட்சத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் கொடுக்காமல், எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதோடு தேசிங்கு பெரியசாமி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிங்கு பெரியசாமி இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்