குரோம்பேட்டை அருகே கல்லூரி பேருந்து மோதி கல்லூரி மாணவன் பலி

தாம்பரம்: குரோம்பேட்டை அருகே பைக் மீது கல்லூரி பேருந்து மோதி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சன்ஜித் ராஜ் (20). கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று கல்லூரியில் இருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடை அருகே ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது, மின்னல் வேகத்தில் வந்த தனியார் கல்லூரி பேருந்து, சன்ஜித் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சன்ஜித் ராஜை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் கல்யாணசுந்தரம் (61) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related posts

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்: அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு

25 கி.மீ. தூரம் வரை மினி பஸ்கள் சேவையை நீட்டிக்கும் திட்டம்: வரைவு அறிக்கை வெளியீடு