கோவை சாலையில் பேனர் வைக்க தடை: நிபந்தனைகளுடன் பிரதமர் மோடிரோடு ஷோவிற்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பேரணி செல்லும் தூரம், வழித்தடத்தை காவல்துறை முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கோவை மாநகர் மாவட்ட பாஜ தலைவர் ஜெ.ரமேஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வரும் 18ம் தேதி கோவை வரும் பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் சாலையில் பேரணியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கு அனுமதி கோரி கோவை போலீசாரிடம் விண்ணப்பித்த நிலையில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காவல்துறை அனுமதி பெற்று இதுபோன்ற பேரணி நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேரணி செல்லக்கூடிய சாலை பிரச்னைக்குரிய பாதை என்பதால் அனுமதி தரவில்லை. இதுபோன்ற பேரணிகளுக்கு எந்த கட்சிக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அனுமதி அளிப்பதில் என்ன பிரச்னை. பாதுகாப்பு விவகாரத்தை பிரதமர் பாதுகாப்பு குழுவான சிறப்பு பாதுகாப்பு படை கவனித்துக்கொள்ளும். பாதுகாப்பு குறைகள் ஏதேனும் இருந்தால் பேரணிக்கு எப்படி அவர்களே ஒப்புதல் அளித்திருப்பார்கள் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ‘பேரணிக்காக தங்களிடம் தடையில்லா சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தில் மாநில துறைக்கு சமமான பொறுப்பு உள்ளது,’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவையில் பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும். பேரணி செல்லும் வழி, தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை காவல்துறை முடிவு செய்து கொள்ளலாம். மனுதாரர் கோவை ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனரின் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். பேரணி செல்லும் பாதையில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை என்று உத்தரவிட்டார்.

Related posts

ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு..!!

சென்னை அருகே டயர் கிடங்கில் தீ விபத்து..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!