கோவை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்..!!

கோவை: கோவை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட விஜயகுமாரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2 நாட்களுக்கு முன்பு தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஏசி வென்டிலேட்டர் குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார். இந்த சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே இன்று காலை கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

200 சவரன் கொள்ளை என தகவல் வெளியான நிலையில் 2.7 கிலோ தங்கம் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. அரூரைச் சேர்ந்த கொள்ளையன் வீடு, ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தனி ஆளாக நகைக்கடையில் 2.7 கிலோ தங்க நகைகளை விஜயகுமார் கொள்ளையடித்துச் சென்றார். கொள்ளை போன 48 மணி நேரத்தில் அனைத்து நகைகளையும் போலீசார் மீட்டனர்.

நகைகளை பறிமுதல் செய்த போலீசார், கொள்ளையன் விஜயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர். ஓரிரு நாளில் கொள்ளையனும் அவருக்கு உதவிய நண்பரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட விஜயகுமாரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். விஜயகுமாருக்கு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகைகள் மீட்கப்பட்ட நிலையில், கொள்ளையனை தேடி தருமபுரியில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்