கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி

கோவை: வெள்ளிங்கிரி மலை ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலியானார்கள். கோவை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரிமலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு கிரிமலை ஏறிய சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் குப்பம்பட்டி ரோடு பாரதி நகரை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் நேற்று காலை மூச்சுதிணறி உயிரிழந்தார்.

இதேபோல், ஹைதராபாத் சென்ட்ரல் பகுதி துவாரா காலனியை சேர்ந்த சுப்பராவ் (40) தனது நண்பர் வெங்கட்கிரியுடன் நேற்று ஏறினார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு உட்கார்ந்த நிலையில் மயக்கம் அடைந்து விழுந்து இறந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை தேனி மாவட்டம் சி.பாளக்கோட்டை பட்டி தெருவை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பாண்டியன் (40) என்பவர் தனது நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார். 3வது மலையை தாண்டி வழுக்குப்பாறை அருகே செல்லும்போது, பாண்டியன் திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறினார்.

உடனடியாக அவரை அவரது நண்பர்கள் மீட்டு பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் மலை அடிவாரம் கொண்டு வந்தனர். அங்கு ஆம்புலன்சில் தயாராக இருந்த டாக்டர் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ஆலாந்துறை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் இதயம் பலவீனமாக உள்ளவர்கள், இதயத்துடிப்பு அதிகம் உள்ளவர்கள் பாதுகாப்பாக மலை ஏறவேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

Related posts

மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க மாநகராட்சி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு