முன்மாதிரி திட்டங்களை சிஎம்டிஏ செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: முன்மாதிரி திட்டங்களை சி.எம்.டி.ஏ செயல்படுத்தி வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேற்று வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ₹2 கோடியில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ₹3.25 கோடியில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறுகையில், ‘ பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும். இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும் அனைத்து பணிகளையும் முடிக்க தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலுடன் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது’ என்றார்.

Related posts

இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது