துணிகள் நறுமணம் பெற வேண்டுமா?!

நம்மைச் சுற்றியும், நம்மிடமும் நறுமணமும் இருந்தால் அப்பகுதியே வாசனையாக இருக்கும். நமது வியர்வை நாற்றத்திலிருந்து மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கவிடாமல் இருப்பதற்கு நமது டையின் நறுமணம்தான் முக்கியப் பங்காற்றுகிறது. இதோ சுட்டெரிக்கும் சூரியனால் உண்டாகும் வியர்வை நாற்றத்தை விரட்டி, துணிகளை நாள் முழுக்க புத்துணர்வாக வைக்க சில எளிய டிப்ஸ்கள்.

காப்பிபவுடர்: இயற்கையாகவே கெட்ட நாற்றத்தை போக்கக் கூடியது காப்பி பவுடர். இந்தத் தூளை ஒரு மூட்டை கட்டி அல்லது துளையுள்ள டப்பாக்களில் அடைத்து உங்கள் துணி அலமாரியில் போட்டு வைத்தால் கெட்ட துர்நாற்றம் போய் நறுமணம் கமழும். மாதத்திற்கு ஒரு முறை இதை மாற்றி விட வேண்டும். மேலும் டப்பாக்கள் கொட்டி விடா வண்ணம் வைப்பதும் தேவை. இல்லையேல் காபிப் பொடி கறை பட்டு அது இன்னும் பிரச்னையாகிவிடும்.

பார் சோப்பு: மடித்த துணிகளை ஒரு பெட்டியில் வைத்து துணிகளை நாப்கின் துணியால் மூடி அதன் மேல் சோப்பை வைத்து விடுங்கள். சோப்பிலுள்ள வாசனை துணிகளுக்கு பரவி நல்ல வாசனை வரும். பிறகு பெட்டியை மூடி நான்கு மணிநேரம் கழித்து பெட்டியை திறந்தால் துணிகளில் நறுமணம் கமழும்.இதற்கு நல்ல பிராண்ட் சோப்பு தேர்வு அவசியம். இல்லையேல் குளியல்சோப் கட்டிகளைக் கூட பயன்படுத்தலாம்.

காட்டன் பஞ்சு மற்றும் பெர்ஃப்யூம்: பெர்ஃப்யூம் கெட்ட நாற்றத்தை போக்காது. மறைக்கத்தான் உதவும். காட்டன் பஞ்சில் உங்களுக்கு விருப்பமான வாசனைத் திரவியத்தை எடுத்து துணி அலமாரியில் சில இடங்களில் போட்டு வைத்தால் நறுமணம் வீசும். மேலும் எந்த பெர்ஃப்யூம் பயன்படுத்துகிறீர்களோ அதையே உடலுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மூலிகை காட்டன் பேக்: காட்டன் பேக்கில் உங்களுக்கு விருப்பமான மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். லாவண்டர் அல்லது லெமன் கிராஸ் பயன்படுத்தலாம். உங்கள் துணி அலமாரியின் உள்ளே இந்த பேக்குகளை போட்டு வையுங்கள். சில பாக்கெட்டுகளை உடையின் பாக்கெட்டில் போடுங்கள். உடை உடுத்தும்போது நறுமணம் வீசும்.

லினன் ஸ்பிரே: ஒரு ஸ்பிரே பாட்டிலில் எஸன்ஷியல் ஆயிலை எடுத்துக் கொள்ளவும். அந்த பாட்டிலின் மேல்பகுதியில் தண்ணீர் ஊற்றி நிரப்பவும். பிறகு எப்பொழுதும் போல துணி அலமாரியில் அந்த ஸ்பிரேவை தெளிக்கவும். வாசனை கமழும். லாவண்டர் ஸ்பிரே கூட பயன்படுத்தலாம். உடை உடுத்தும் போதும் பயன்படுத்தலாம்.

நறுமணம் மிகுந்த மரக்கட்டை: சில மரக்கட்டைகள் நறுமணம் தரும். சந்தனக் கட்டை ஒரு அற்புதமான வாசனை கமழும் பொருள். சில துண்டுகள் சந்தனக்கட்டையை உங்கள் துணி அலமாரியில் போட்டு
வையுங்கள். நறுமணம் கமழும்.

வெப்பரீஸ்: கெட்ட துர்நாற்றத்தை போக்கும் வெப்பரீஸை உங்கள் (துணி) அலமாரியில் போட்டு வைத்தால் கெட்ட துர்நாற்றத்தை நடு நிலையாக்கும்.

வினிகர்: முதல் நாள் உபயோகித்த துணியை அடுத்த நாள் உபயோகிக்க வேண்டியிருந்தால், அதற்கு வினிகர் நல்ல பொருள். ஒரு ஸ்பிரேபாட்டிலில் வினிகர் மற்றும் சமமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு, வியர்வை நாற்றம் அதிகம் அடிக்கும் அக்குள் பகுதியில் ஸ்பிரே பண்ணுங்கள். கவலை இல்லாமல் பயணிக்கலாம்.
– காகை ஜெ. ரவிக்குமார்

Related posts

நீட் தேர்வு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு கருத்துக்களை தெரிவிக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது!