சித்ரா பவுர்ணமி திருவிழா; குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு வைபவம்

தென்காசி: குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 14ம் தேதி காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சார்பில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள், வில்லிசை, நள்ளிரவில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்நிலையில் நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு காலையில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து. செண்பகாதேவி உற்சவர் அம்மனை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்பு செண்பகாதேவி அருவிக்கரை அருகில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் உள்ள அகஸ்தியர் பாதத்தில் உற்சவர் அம்மனை வைத்து அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து செண்பகாதேவி அருவியில் அம்மனை வைத்து சந்தனம், பன்னீர், குங்குமம், மலர்களால் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. அப்போது அருவி தடாகத்தில் உள்ள தண்ணீரில் மஞ்சள் கலந்து மஞ்சள் நீராக காட்சியளித்தது. தொடர்ந்து அம்மன் வீதி உலா நடத்தப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related posts

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவு:49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!

சமவெளியிலும் குறைந்த ஏக்கரில் நிறைவான மகசூல் தரும் மிளகு!