திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முடிந்த நிலையில் கிரிவலப்பாதையில் தூய்மைப் பணி தீவிரம்: டன் கணக்கில் குப்பைகள் அகற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் கடந்த இரண்டு நாட்களாக நடந்து முடிந்தது. தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். எனவே, சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெற்ற இரண்டு நாட்களும், திருவண்ணாமலை நகரம் விழா கோலாகலமாக காட்சியளித்தது. காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் நிறைவடைந்து, பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊர் திரும்பிய நிலையில், திருவண்ணாமலை நகரையும், கிரிவலப்பாதையையும் தூய்மைச் செய்யும் பணி அசுர வேகத்தில் நடந்தது. திருவண்ணாமலை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் உள்பட 1,620 பேர் இரவு, பகலாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

தூய்மைப்பணியாளர்களின் கடும் உழைப்பால், 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையும், அண்ணாமலையார் கோயில் மாட வீதிகள் உள்ளிட்ட நகரின் சாலைகளும், தற்காலிக பஸ் நிலையங்களும் நேற்று ஒரே நாளில் பளிச்சென தூய்மையானது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருவண்ணாமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட டன் குப்பை குவிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அன்னதானம் வழங்குவோர் அந்த பகுதியை தங்கள் சொந்த பொறுப்பில் தூய்மை செய்துவிட்டு செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்து அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், கிரிவலப்பாதையின் பெரும்பாலான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்ட பாக்குமட்டை தட்டுகளும், வாழை இலைகளையும் அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றனர். அதனையும், தூய்மைப்பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களின் பணி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. பவுர்ணமி நாட்களில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஈடுசெய்யும் மாற்று விடுப்பு வழங்கவும், ஊக்கத்தொகை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை

கேரளாவில் டெங்கு பரவுகிறது: 4 மாதங்களில் 43 பேர் பலி