சின்னச்சுருளி அருவியில் அடிப்படை வசதி வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

வருசநாடு:கடமலை-மயிலை ஒன்றியத்தில், கோம்பைத்தொழு அருகே சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், அருவிக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும் கடந்த சில நாட்களாக சின்னசுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், நீர்வரத்து குறைவாக இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.

அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக மேகமலை வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், அருவிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், அருவிக்கு வாகனங்களில் வருவோர்கள் சுமார் 1 கி.மீ தூரம் கரடு முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல், அருவியில் பெண்களுக்கான உடை மாற்றும் அறை மற்றும் பாதுகாப்பு வேலிகள் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சின்னசுருளி அருவியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

மேட்டூர் அருகே பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம்: திரளானோர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து