மறைந்த எம்பி கணேசமூர்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல்

மொடக்குறிச்சி: மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் வீட்டிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஈரோடு எம்பி கணேசமூர்த்திக்கு கடந்த 24ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மேல் சிகிச்கைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 28ம் தேதி உயிரிழந்தார்.

அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த குமாரவலசில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, அமைச்சர் முத்துசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி எம்பி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக ஈரோடு சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவல்பூந்துறையில் உள்ள கணேசமூர்த்தி வீட்டிற்கு நேற்று காலை நேரில் சென்றார். அங்கு கணேசமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மதிமுக மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேல், கந்தசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related posts

ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் சத்திய ஷீலா வழக்கு..!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!