அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் சிறுமி டானியாவுக்கு வீடு கட்ட அனுமதி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியாவுக்கு ரூ.1.48 லட்சத்தில் வீட்டுமனைப் பட்டா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்வதற்கான அனுமதி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா, அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. தங்களுக்கு வசதி இல்லாததால் மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதல்வரிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து முதல்வர் அறிந்தவுடன், சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவீதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக சிறுமி டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர் உடனிருந்தனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்