ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

சென்னை: பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமை செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.502 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மேலும், ரூ.732 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கலும் நாட்டுகிறார். அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக ரூ.30 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்குகிறார்.

அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.204 கோடியே 57 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், பள்ளி கல்வி துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்கள், நூலக கட்டிடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ரூ.59.57 கோடியில் கட்டிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவு கட்டிடம், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் ரூ.25 கோடியே 15 லட்சம் செலவில் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.502 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.592 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 36 கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய ராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகள் மற்றும் ரூ.139 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு