முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு மானிய கோரிக்கை மீதான விவாதமும் ஒரு மாதம் நடைபெற்றது. இதில் துறைசார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டிருந்தார்கள். நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகியிருந்தது.

எனவே, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லும் முதல்வரின் பயணத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் தர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வெளிநாடு செல்ல அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம் என்பதால் கூட்டத்தில் அனுமதி தரப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மே 10க்கு பின் சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல வாய்ப்பு உள்ளது.

வெளிநாடுகளில் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து முதலீடு பெறுவது என்பது தொடர்பாக அமைச்சரவை விவாதிக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு இரண்டாவது முறையாக முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். புதிய தொழில் கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

மதுராந்தகம் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

மே-16: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை