சிக்கன் பப்சில் கிடந்த பல்லி: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

நீலகிரி: குன்னூரில் சிக்கன் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட மாணவன் அதிலிருந்த பல்லியை பார்த்து அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் உடனடியாக இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டு சென்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், உபதலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள கடையில் 4 சிக்கன் பப்ஸ் வாங்கி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது மனைவி மற்றும் மகன் உட்பட 3 பேரும் சிக்கன் பப்ஸ்களை சாப்பிட்டுள்ளார். அவரது மகன் சிக்கன் பப்ஸை சாப்பிடும் போது அதில் சிறிய பல்லி இருந்துள்ளது. அதனை முதலில் கொத்தமல்லி என நினைத்துள்ளனர். பின்னர் சிக்கன் பப்ஸில் கிடந்தது பல்லி என தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூவரும் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இன்று காலை வீடு திரும்பினர். சிக்கன் பப்ஸில் பல்லி கிடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடைக்கு பூட்டு போட்டு சென்றனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டு சென்றனர். மாவட்ட ஆட்சியரின் விசாரணைக்கு பிறகு கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை