சேரன்மகாதேவியில் ஆயிரம் ஆண்டு பழமையான தெய்வீஸ்வரமுடையார் கோயிலில் ரூ.1.61 கோடியில் புனரமைப்பு பணி

*தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி

வீரவநல்லூர் : சேரன்மகாதேவியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தெய்வீஸ்வரமுடையார் கோயிலில் ரூ.1.61 கோடியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பணிக்கான பூமி பூஜை நேற்று துவக்கி வைக்கப்பட்டது.சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட மூலக்கோயில் தெருவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தெய்வீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் பல ஆண்டுகளாக இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருந்ததால் கோயில் சிதிலமடைந்து இருந்தது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்து ஒரு கால பூஜை மட்டுமே தற்போது நடந்து வருகிறது.

அப்பகுதியை பூர்வீகமாக கொண்டவரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், கோயில் புனரமைப்பு பணிக்கு நிதி ஓதுக்கீடு செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து முதல்வரின் உத்தரவின் படி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தெய்வீஸ்வரமுடையார் கோயில் புனரமைப்பு பணிக்கு ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்தார்.

திருப்பணிக்கான பூமி பூஜை விழா நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்து பூமி பூஜையை துவக்கி வைத்தார். விழாவில் அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயற்பொறியாளர் முருகன், உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன், செயல் அலுவலர் இளங்குமரன், திமுக ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி பிரபு, நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல நூறு ஆண்டுகளாக தூர்ந்து கிடந்த தெய்வீஸ்வரமுடையார் கோயிலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related posts

பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார்