சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மகளிர் தலைமைத்துவ மாநாடு

சென்னை: சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில், வி.ஐ.டி. பிசினஸ் ஸ்கூல் மற்றும் உமன் ஆப் தமிழ்நாடு அமைப்பு ஆகியவற்றின் சார்பில் மகளிர் தலைமைத்துவ மாநாடு நேற்று நடந்தது. வி.ஐ.டி. நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டா வரவேற்றார். வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், துணை பதிவாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், இந்தியாவில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள்தான் பணிபுரிகின்றனர்.

பெண்கள் இத்துறைகளில் முன்னேறாமல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற முடியாது. இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 27 சதவீதமாக உள்ளது. இதுவே, வளர்ந்த நாடுகளில் 60 முதல் 100 சதவீதமாக உள்ளது. யுனெஸ்கோ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் இன்னும் 3 சதவீதத்தை கூட நாம் தாண்டவில்லை. 22 நாடுகளில் பல்கலைக்கழக படிப்பு வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகள் கல்விக்காக கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆசிய கண்டம் முன்னோடியாக உள்ளது. 193 நாடுகளில் 29 நாடுகளின் பிரதமர் அல்லது குடியரசு தலைவராக பெண்கள் உள்ளனர்.இந்திய நாடாளுமன்றத்தில் 15 சதவீதம் மட்டுமே பெண்கள் பதவியில் உள்ளனர். இந்நிலை மாறி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றார். வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் சேகர் விஸ்வநாதன், சிறந்த மகளிர் குழு உறுப்பினர்களை பாராட்டி பரிசளித்தார். விஞ்ஞானியும், செமி கண்டக்டர் தொழில்நுட்ப ஆலோசகரும், உமன் ஆப் தமிழ்நாடு நிறுவனருமான வள்ளி அருணாசலம் தலைமையில், உயர் பதவிக்கு பயணம் என்ற தலைப்பில் குழு விவாதம் நடந்தது.

இதில் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர் ஐஸ்வர்யா தேசிகன், இஸ்ரோ நிறுவனத்தின் ஜி.சாட் 7ஆர் திட்ட இயக்குநர் நீலாவதி, மோவேட் நிறுவன மனித வளப்பிரிவு இணை துணை தலைவர் புனிதா அந்தோணி, ஜோஹோ நிறுவன இயக்குநர் ராஜலட்சுமி சீனிவாசன், வர்த்தக மற்றும் தலைமைத்துவ பயிற்சியாளர் சங்கீதா சங்கரன் சுமேஷ், ஜெராகோ நிறுவன அதிகாரி வாணி பிரியா ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை பொறுப்பில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்தல், தலைமை பொறுப்பில் சிறந்து விளங்குதல், கார்ப்பரேட் உலகில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சூழ்நிலையை வளர்ப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து