சென்னையில் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து 1000க்கும் மேற்பட்ட போலி பட்டதாரிகளை உருவாக்கிய மோசடி கும்பல் சிக்கியது: பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னையில் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து போலி சான்றிதழ்களை வழங்கி 1000க்கும் மேற்பட்ட போலி பட்டதாரிகளை உருவாக்கிய மோசடி கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு வழக்குகள் தொடர்பாக நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய குற்றபிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் களிம் சாய் ராம் ரெட்டி என்பவர் கடந்த மாதம் வேலைக்காக அமெரிக்கா செல்ல விசா கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதன் பெயரில் நவ.16ம் தேதி அமெரிக்க தூதரகத்திற்கு நேர்முகத் தேர்விற்கு வந்துள்ளார்.

அப்போது அவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது, கல்வி மற்றும் பணி அனுபவ சான்றிதழ்கள் போலியாக இருந்தது தெரியவந்தது, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு குறித்து களிம் சாய் ரெட்டியை கைது செய்து விசாரித்தோம். விசாரணையில் போலி பட்டதாரி சான்றிதழ்களை ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த ருஷிகேஷ் ரெட்டி மற்றும் திவாகர் ரெட்டி ஆகியோர் தயார் செய்து கொடுத்ததாக களிம் சாய் ராம் ரெட்டி வாக்குமூலமாக தெரிவித்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு சென்று விசாரித்தனர்.

துணை கமிஷனர் நிஷா, கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல்பாண்டி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலி பட்டதாரி சான்றிதழ் தொடர்பாக 4 பேரை கைது செய்தது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இன்ஜினீயரிங் படித்த ருஷிகேஷ் ரெட்டி ஜவுளிக்கடை நடத்தி வந்ததும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஐதராபாத்தில் சித்தா கன்சல்டன்சி என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வெளிநாடு செல்பவர்களுக்கு போலி பட்டதாரி கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை அனுபவ சான்றிதழ் தயாரித்து கொடுத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரியவந்தது. மேலும், இவர்களை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு சென்னை வில்லிவாக்கத்திலுள்ள முகமது ரியாஸ் மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனத்திலிருந்து போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த முகமது ரியாஸ் மற்றும் மகேஷ்வரன் ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கல்வி நிறுவனம் நடத்தி வந்த முகமது ரியாஸ் கொரோனா காரணமாக நஷ்டம் அடைந்ததால், 2019ம் ஆண்டு முதல் இந்த போலி நிறுவனம் நடத்தி போலியாக கல்வி சான்றிதழ் தயாரித்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் சில ஏஜென்டுகளுடன் தொடர்பில் உள்ளதை கண்டுபிடித்துள்ளோம். ரூ.1.5 லட்சம் வரை போலி சான்றிதழ் தயாரிக்க வாங்கி உள்ளனர். இதுவரை 1000க்கும் மேற்பட்டோருக்கு பணம் பெற்று போலி பட்டதாரி சான்றிதழ் கொடுத்து மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்தான விசாரணை தொடர்கிறது. இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு 4 குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்தாண்டு மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.33 லட்சத்து 73 ஆயிரத்து 41 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகை கவுதமி வழக்கில் முக்கிய நபர்கள் முன்ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இரண்டாவது முக்கிய நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை காவல்துறைக்கு மனு அளித்து சைபர் கிரைம் குறித்தான புகார்களை விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு அளிக்கும் வகையில் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது, அடுத்து வர உள்ள ஆண்டில் துணை ஆணையர்கள் கீழ் இயங்கும் அணிகளுக்கு தேவையான சாப்ட்வேர்கள் குறித்து வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது, இதை மிக விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து