சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 7 வழக்குகள் பதிவு, 14 குற்றவாளிகள் கைது..!!

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 9.71 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த ஜூலை 21 முதல் 27ம் தேதி வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9.71 கிலோ கஞ்சா, 14 Tydol வலி நிவாரண மாத்திரைகள், ரொக்கம் ரூ.2,720, 6 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 749 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,650 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 839 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 41 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து