சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள்:  சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 14 அரிய வகை மலைப்பாம்பு குட்டிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தமிழக வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. அதில் 27 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர், பெரிய பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகள் அந்த கூடைக்குள் என்ன இருக்கிறது என கேட்டதற்கு, கூடைக்குள் குழந்தைகள் விளையாடும், ரப்பரில் செய்யப்பட்ட பாம்புகள், பல்லிகள், எலிகள் போன்ற பொம்மைகள் இருப்பதாக கூறினார்.

ஆனால் அதிகாரிகள் கூடையை திறந்து பார்த்தபோது அதில், பாம்பு குட்டிகள் உயிருடன் நெளிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் பாம்புக் குட்டிகளை கூடைக்குள் வைத்து கடத்தி வந்த அந்த பயணி, பயப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்த பாம்புகள் ரப்பர் பாம்புகள் போல் விஷமற்ற விளையாட்டு பாம்புகள்தான் எனக் கூறி, பாம்பு குட்டிகளை எடுத்து தனது உள்ளங்கைகளில் வைத்து காட்டினார்.

இதுகுறித்து சுங்க அதிகாரிகள் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அந்த பாம்பு குட்டிகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 14 பாம்பு குட்டிகள் இருந்தன. அதில் 12 பாம்பு குட்டிகள் பால் பைத்தான் எனப்படும் ஒருவகை மலைப்பாம்பு குட்டிகள். 2 பாம்பு குட்டிகள் கிங்ஸ் ஸ்நேக் வகையைச் சேர்ந்தவை. இது குறித்து கடத்தல்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ‘‘இந்த விஷமற்ற பாம்பு குட்டிகள் வெளி நாடுகளில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதை வளர்த்து, அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவோம். பாம்புகளை வாங்குபவர்கள் பல்வேறு விதமாக பயன்படுத்துகின்றனர். சில கோடீஸ்வரர்கள் பங்களாக்களில், தொட்டிகளில் பாம்பு குட்டிகளையும் தொட்டிகளில் வைத்து வளர்க்கின்றனர் என கூறினார்.

இந்த பாம்புகளில் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவற்றால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது என கூறி அவற்றை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணியை கைது செய்தனர். அதோடு இந்த 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், மீண்டும் நாளை (இன்று) புதன்கிழமை தாய்லாந்து செல்லும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்