மதுரவாயலில் தீப்பற்றி எரிந்த ரசாயன பேரல்கள்: தீயணைப்பு வீரர் காயம்

பூந்தமல்லி: மதுரவாயலில், ரசாயன பேரல்கள் தீ பற்றி எரிந்தன. இதில், தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் கிடங்கு உள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன ஆயில்கள் நிரப்பி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை திடீரென இந்த கிடங்கில் இருந்த பேரல்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த மற்ற பேரல்களுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மதுரவாயல், பூந்தமல்லி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள மற்ற கம்பெனிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர் கோமதி சங்கர் என்பவருக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? ரசாயனம் கலந்த ஆயில் கிடங்கு அமைக்க உரிய அனுமதி உள்ளதா? போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு