சொந்த மைதானத்தில் சவாலை சந்திக்க ரெடி: ஆர்சிபியுடன் இன்று ஐதராபாத் மோதல்

ஐதராபாத்:16வது ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் பின்தங்கி இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது. அந்த அணிக்கு எஞ்சி இருக்கும் 2 லீக் போட்டிகளில் உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் கடைசி ஆட்டம் இதுவாகும்.

பாப் டூபிளஸ்சிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 12 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 59 ரன்னில் சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் ரன்-ரேட்டில் (+0.166) வலுவான நிலையை எட்டி உள்ளது.

எனவே மீதமுள்ள 2 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆர்சிபி எவ்வித பிரச்சினையும் இன்றி அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்துவிடும். ஒன்றில் தோற்றால் மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால்தான் தகுதி பெற முடியும். எனவே ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

இருப்பினும் வலுவான ஆர்சிபி அணியின் சவாலை சமாளிக்க ஐதராபாத் அணி வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் இன்று சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செயல்பட்டால் வெற்றி சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12 போட்டிகளில் ஐதராபாத்தும், 9 போட்டிகளில் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு போட்டி முடிவு இன்றி போனது.

Related posts

சுனில் நரைன் அதிரடி ஆட்டம் நைட் ரைடர்ஸ் முதலிடம்

28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடியது சென்னை: ஆல் ரவுண்டர் ஜடேஜா அமர்க்களம்

93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்