அருப்புக்கோட்டை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் முனைவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே இடத்தில் ஐந்து நடுகற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நடுகற்கள் குறித்து அவர்கள் கூறியதாவது: பொதுவாக வீர மரணம் அடைந்தவர்களுக்கு அவர்களின் பெயர், பெருமையை நினைவு கூறும்விதமாக நடுகல் வைத்து வழிபடுவது சங்க காலத்திற்கு முன்பிருந்தே வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் இந்த நடுகற்களானது, ஒரே இடத்தில் நடப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு நடுகல்லில் நின்ற கோலத்தின் வீரன் வாளினை மேல் நோக்கி பிடித்தபடி தலைக்கு மேலே நாசிக்கூடுடன் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் வீரன் வாளேந்தியபடியும், அருகில் வணங்கியபடி அவரது மனைவி, காலடியில் அவரது மகன் ஆகியோர் உள்ளனர். தலைக்கு மேலே சிதைந்த நிலையில் மூன்று வரிகொண்ட தமிழ் கல்வெட்டும் உள்ளது.

மற்றொரு நடுகல்லில் ஒரு பெண் இருகரம் கூப்பி வணங்கியபடி நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது கணவன் இறந்த பின்பு, நோன்பு இருந்து அவர் உயிர் துறந்திருக்கலாம் என்று தெரிகிறது. அடுத்ததாக இருகரம் கூப்பியபடி நின்ற கோலத்தில் ஒரு வீரனின் உருவம் இருக்கிறது. இங்கு வித்தியாசமாக பாம்பு உருவம் கொண்ட நடுகல்லும் காணப்படுவது சிறப்பான ஒன்றாக இருக்கிறது. இச்சிற்பங்கள் 17ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இவ்வாறு கூறினர்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து