மத்திய சென்னையில் பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் காரில் மீண்டும் சோதனை: படிப்பதற்கான பேப்பர் மட்டுமே இருந்ததால் பறக்கும்படை ஏமாற்றம்

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்கு நேற்று காலை புறப்பட்டு சென்ற மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் காரில் பறக்கும் படையினர் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது காரில் அவர் படிப்பதற்காக வைத்திருந்த பேப்பர் மட்டுமே இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி காலை, மாலை என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் தயாநிதி மாறன் எழுச்சியுரையாற்றி வருகிறார். அவரின் பேச்சு வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையம் வால்டாக்ஸ் சாலை அருகே தயாநிதி மாறன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென மடக்கி சோதனை செய்தனர். ஆனால், காரில் பணம், பரிசு பொருட்கள் உள்ளதா என்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்காததால் தயாநிதி மாறனை அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் துறைமுகம் பகுதி அன்னை சத்யா நகர் அப்பாராவ் கார்டன் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அவரது கார் சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் வந்த போது திடீரென காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வதற்காக நிறுத்தினர். உடனடியாக காரை தயாநிதி மாறன் நிறுத்த சொன்னார். தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்த அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரது காரின் அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது காரில் அவர் படிப்பதற்காக வைத்திருந்த தினசரி நாளிதழ் மட்டுமே இருந்தது. காரில் வேறு எந்த பொருட்களும் இல்லை. தொடர்ந்து சோதனை முழுமையாக முடிந்து விட்டதா, நான் கிளம்பலாமா என்று கேட்ட பின்னரே தயாநிதி மாறன் அங்கிருந்து காரில் ஏறி பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார். இதுவரை மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் காரை 4 முறை பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்