வரும் ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வு தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து வர தடை: 6,244 பதவிகளுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர்

சென்னை: குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடக்கிறது. 6,244 பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வை சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது.

இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 6,244 பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடக்க இருக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை நடக்கிறது.

தேர்வுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், தேர்வர்கள் முழு வீச்சில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரும் வாரத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது. ஒரு திருவிழா போல குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதனால், விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதே நேரத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட எழுது பொருட்களைத் (கருமைநிற மை கொண்ட பந்துமுனை பேனா) தவிர, அலைபேசி (செல்லுலார் போன்கள்), மின்னனு அல்லது இதர வகை கணிப்புக் கருவிகள், நினைவூட்டுக் குறிப்புகள் உள்ளடங்கிய கைக்கடிகாரங்கள் மற்றும் மோதிரங்கள், புளூ டூத் சாதனங்கள், தொடர்புச் சில்லுகள், பதிவு செய்யும் கருவிகள் ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது பிற மின்னனுச் சாதனங்களான கைக்கடிகாரம் அல்லது மோதிரம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகவோ பயன்படுத்துவது மற்றும் மின்னனு அல்லாத பிமற்றும்ஜி தரவுப் புத்தகம்,

கணிதம் மற்றும் வரையும் கருவிகள், மடக்கை அட்டவணை, படியெடுக்கப்பட்ட வரைபடங்கள், புத்தகங்கள், மடக்கை விதிகள், குறிப்புகள், தனித்தாள்கள், கையேடுகள், குறிப்பேடுகள், கைப்பைகள், போன்றவற்றை தேர்வுக்கூடத்திற்குள் கொண்டுவரக்கூடாது. அவ்வாறான தடை செய்யப்பட்ட பொருட்களை அல்லது கருவிகளை வைத்திருப்போர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அவர்களது விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படுவதுடன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.

தேவை எனக் கருதப்படின் அவ்விடத்திலேயே சோதனைக்கு (உடற்சோதனை உட்பட) உட்படுத்தப்படுவர். தேர்வர்கள் அவர்களின் சொந்த நலன் கருதி கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு கூடத்திற்கு எடுத்துவர வேண்டாம் என அறிவுறுத்துவதுடன் அப்பொருட்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர இயலாது எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

* தேர்வுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், தேர்வர்கள் முழு வீச்சில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

* எழுத்து தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடக்க இருக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை நடக்கிறது.

* வரும் வாரத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது.

Related posts

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை