டிராக்டரில் சிக்கி உடல் துண்டாகி சிறுவர்கள் பலி

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊசூர் அருகே ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர்(8). பாட்டி சரளா வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சரளாவுக்கு சொந்தமான நிலத்தில் முருகேசன் என்பவர் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது சிறுவன் கிஷோர் தானும் டிராக்டரில் அமர வேண்டும் என அடம்பிடித்ததால் டிராக்டரில் அமர வைத்துள்ளார். அப்போது, முருகேசன் டிராக்டரை இயக்கும்போது நிலைதடுமாறி சிறுவன் கிஷோர் கீழே விழுந்தான். இதனை கவனிக்காத டிரைவர் டிராக்டரை இயக்கும்போது, நிலத்தை உழுவதற்கான ரோட்டாவேட்டரில் சிக்கிய கிஷோர் உடல் பாகங்கள் சிதறி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய டிரைவர் முருகேசனை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சதீஷ்குமார் (36). வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகன் மாதவ்(6). 1ம் வகுப்பு படித்து வந்தார். சதீஷ்குமாருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. நேற்று மாலை சதீஷ்குமார் தனது விவசாய நிலத்தை உழுது சீர் செய்யும் பணிக்காக சென்றார். அப்போது, அவரது மகன் மாதவ், தந்தைக்கு உதவியாக நிலத்திற்கு சென்றார். சதீஷ்குமார் நிலத்தில் டிராக்டர் மூலம் உழுதபோது, அதன் மீது அமர்ந்திருந்த சிறுவன் மாதவ் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், டிராக்டர் பின்புறத்தில் உள்ள ரோலர் இயந்திரத்தில் சிக்கிய சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு