பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்களால் காரில் கடத்தப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன மேலாளர் மீட்பு

அண்ணாநகர்: அரியலூர் மாவட்டம் இரவான்குடியை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). இவர், முகப்பேர், அமைந்தகரை மற்றும் அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆருத்ரா நிதி நிறுவன கிளைகளின் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேடப்பட்ட இவர், ஐதராபாத்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 90 நாட்கள் சிறையில் இருந்த இவர், நிபந்தனை ஜாமீனில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வெளியே வந்தார். பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். அதன்படி, கடந்த 28ம் தேதி உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்ட இவர், தனது உறவினரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகனை கோயம்பேட்டில் பார்க்க சென்றபோது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல், செந்தில்குமாரை மடக்கி பிடித்து வாயை துணியால் அடைத்து சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

பின்னர், அக்கும்பல் அவரது தாய் கலாவை (53) செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் விசாரித்து வந்தனர். அதில், மர்ம கும்பல் போரூர் பகுதியில் செந்தில்குமாரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றதும், செந்தில்குமார் போலீசாருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் திண்டுக்கல் மாவட்டத்துக்கு சென்றதும் தெரிய வந்தது. இதனிடையே செந்தில்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக, அம்பத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு தப்பிச்சென்ற செந்தில்குமாரை விசாரணைக்கு வரும்படி போலீசார் செல்போன் மூலம் பலமுறை அழைத்தனர். ஆனால், விசாரணைக்கு பயந்து அவர் வரவில்லை. இதனால், போலீசார் திண்டுக்கல் மாவட்டத்துக்கு விரைந்து சென்று நேற்று முன்தினம் இரவு, தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த செந்தில்குமாரை சுற்றி வளைத்து பிடித்து, கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, அவரிடம் விசாரித்தனர்.

அப்போது, அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ஆருத்ரா நிதி நிறுவன கிளை மேலாளராக பணியாற்றி வந்தேன். அம்பத்தூர் பகுதியை சேர்ந்த செல்வம், அஜித்குமார், விக்னேஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரும் எங்கள் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்தனர். இந்நிலையில், அப்பணம் முறையாக அவர்களுக்கு திருப்பி கொடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து என்னை காரில் கடத்தி சென்று, பணம் கேட்டு சரமாரியாக தாக்கினர். என்னிடம் பணம் இல்லை என்று தெரிந்ததும், போரூர் பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து, எனது தாயார் போலீசில் புகார் கொடுத்தது எனக்கு தெரியாது. மர்ம கும்பலிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று பயந்து திண்டுக்கலில் உள்ள எனது நண்பன் வீட்டிற்கு சென்று தங்கினேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

Related posts

சேத்தியாத்தோப்பு அருகே விவசாயிகளை ஏமாற்றி போலி உரம் விற்பனை

393 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு கட்டிட இடிபாடுகள் கொட்டும் கிடங்காக மாறியது