கேப்டன் பாபர் 151, இப்திகார் அகமது 109*: பாகிஸ்தான் அணி அபார வெற்றி

முல்தான்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நேபாள அணியுடன் மோதிய பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ஐசிசி உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசிய கோப்பை தொடர், பாகிஸ்தானின் முல்தான் நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதின (ஏ பிரிவு). டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பகார் ஸமான், இமாம் உல் ஹக் இணைந்து பாக். இன்னிங்சை தொடங்கினர்.

பகார் 14 ரன் எடுத்து கே.சி.கரண் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக் வசம் பிடிபட்டார். இமாம் 5 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேற, பாகிஸ்தான் 6.1 ஓவரில் 25 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் பாபர் ஆஸம் – முகமது ரிஸ்வான் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 86 ரன் சேர்த்தது. ரிஸ்வான் 44 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஆஹா சல்மான் 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் 27.5 ஓவரில் 124 ரன்னுக்கு 4 விக்கெட் என சரிவை சந்தித்தது. எனினும், 5வது விக்கெட்டுக்கு பாபருடன் இணைந்த இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறு முனையில் பாபர் 109 பந்தில் 4 பவுண்டரியுடன் சதத்தை நிறைவு செய்தார்.

இப்திகார் 67 பந்தில் சதம் விளாசி அசத்தினார். பாபர் – இப்திகார் இணைந்து 214 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பாபர் 151 ரன் (131 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), ஷதாப் கான் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன் குவித்தது. இப்திகார் 109 ரன்னுடன் (71 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். நேபாள பந்துவீச்சில் கமி 2, கரண், லாமிசேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 343 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் 23.4 ஓவரில் 104 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆரிப் ஷேக் 26, சோம்பால் கமி 28, குல்சன் ஜா 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான் 4, ஷாகீன் அப்ரிடி, ஹரிஸ் ராவுப் தலா 2, நசீம் ஷா, நவாஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 238 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது. நாளை மறுநாள் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Related posts

சித்திரை மாதத்தில் பிறந்ததால் உயிருக்கு ஆபத்து மூட நம்பிக்கையால் பிறந்த குழந்தை கொலை: தாத்தா கைது

மனைவியை எஸ்ஐ அபகரித்து விட்டார்: கணவர் போலீசில் புகார்

திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது