கம்பம் பகுதியில் விதிமீறி இயங்கும் செங்கல் சூளைகள் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மீட்கப்படுமா?

*பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ வைப்பு

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கம்பம் : தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமி. கம்பம் பள்ளத்தாக்கு சுற்றிலும் பச்சை பசேலென பச்சை கம்பளியை போர்த்தியது போல எங்கெங்கும் காணினும் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான ஏகலூத்து ரோடு, மேல கூடலூர், கருங்காலி குளம் ஓடை, ஆகிய வனப்பகுதிகளில் அரசின் முறையான அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பொதுவாக காப்புக் காடுகள் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விவசாயம் மட்டுமே செய்து கொள்ள வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் முழுக்க முழுக்க வணிக பயன்பாட்டிற்காக இப்பகுதிகளில் விதிமீறி செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. தனி நபர்களுக்கு சொந்தமான காப்பு காடுகளில் வனத்துறையிடம் அனுமதி பெறாமல் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படும் செங்கல் காளவாசல்களில் நாள்தோறும் சுமார் 10 முதல் 15,000 செங்கற்கள் எடுக்கப்படுகிறது.

வாரம் ஒரு முறை ஒரு லட்சம் செங்கல் வேக வைத்து எடுக்கப்படுகிறது.செங்கல்லை வேக வைக்க வாரந்தோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோ விறகு கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் செங்கற்களை வேக வைக்கும் பொழுது சிறிய தீப்பொறி பறந்து சென்று பிடித்தால் கூட ஒட்டு மொத்த வனப்பகுதியும் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

செங்கல் சூளையிலிருந்து வெளிப்படும் புகை மண்டலத்தால், வனப்பகுதிக்குள் இருக்கக்கூடிய சிறு சிறு பூச்சி, பறவை போன்ற உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விடுகின்றன. காற்று பெரிய அளவில் மாசுபட்டு போகிறது. மேலும் செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் அள்ளுவதற்கு முறையாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையினரிடம் அனுமதி பெறாமல் செங்கல் சூளைகள் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலேயே ஜேசிபி மூலம் சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக கூறப்படுகிறது. வெளி நபர்கள் யாரும் செங்கல் சூலைகளுக்குள் செல்லக்கூடாது என்பதற்காக சுற்றிலும் வேலி அமைத்து, அதிக அளவில் பள்ளம் தோண்டி தேவையான மண்ணை எடுத்துவிட்டு, அருகில் உள்ள மண்ணை எடுத்து அப்பகுதியை சமம் செய்து விடுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விதி மீறி இயங்கும் செங்கல் சூளைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் முடக்க வேண்டும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, நாட்டுச் செங்கல் சூளைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற தேவையில்லை.

அதே நேரம் காளவாசலில் இருந்து ஏற்படும் புகையினால் பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படுமானால் அது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதுகுறித்து அறம் செய் அறக்கட்டளையின் தலைவர் அபுதாகிர் கூறும்போது, ‘தமிழக வனத்துறை வனவியல் விரிவாக்க மையம் என்ற பெயரில் உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி காடுகளை அதிகரிக்கும் பணிகளை செய்து வருகிறது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏறத்தாழ நூறு ஏக்கர நிலம் இத்தகைய விரிவாக பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இவர்கள் பல்வேறு மரக்கன்றுகளை உருவாக்கி நட்டு,பராமரித்து காடுகளாக்க பாடுபடுகின்றனர்.மேலும் செங்கல் காளவாசல் தேவையான மண் புவியியல் மற்றும் சுரங்க துறையின் அனுமதியின்றி தன்னிச்சையாக ஜேசிபி மூலம் அள்ளப்படுகிறது.

செங்கல் சூளைகளில் தீ வைப்பதால் ஏற்பட்டும் புகைமண்டலத்தால், வனப்பகுதியில் உள்ள சிறு சிறு பூச்சிகள் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இது சம்பந்தமாக, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மற்றும் வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்’’ என்றார்.

செங்கலை வேக வைக்க தீ வனப்பகுதியில் புகை மண்டலம்

‘யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டு வரும் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரப் பகுதிகளான ஏகலூத்து ரோடு, கருங்காலி குளம் ஓடை, கம்பமெட்டு ரோடு, மணிகட்டி ஆலமர ரோடு, ஆகிய பகுதிகளில் தனி நபர்கள் ஒரு சிலர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள இடங்களில் செங்கல் சூளைகள் அமைத்து இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் செங்கலை வேக வைக்க உண்டாக்கப்படும் தீயினால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட வனப்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியத்தால் பெருகும் செங்கல் சூளைகள். அடர்ந்த வனப்பகுதி மட்டுமல்லாது, மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளை ஒட்டி கம்பம் நகருக்குள் ஏராளமான செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகின்றன. செங்கல் காளவாசல்களில் செங்கலை வேக வைப்பதற்காக மூட்டப்படும் தீயினால் ஒரு வாரத்திற்கு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கும். இதனால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகள், கண் எரிச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.

Related posts

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!