இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

காது என்பது நமது உடலின் நுட்பமான உறுப்புகளில் ஒன்றாகும், இது ஒலிகளைப் புரிந்து கொண்டு நமது மூளைக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. ஆனால் நாம் உண்மையில் நம் காதுகளை நன்றாக கவனித்துக் கொள்கிறோமா.. என்றால் கேள்விக்குறிதான். அதனால்தான், காதுகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், காதுகளில் இயர்பட்ஸ் போடுவது, சேப்டி பின் போடுவது, ஹேர் பின்களை போடுவது, சிலர் பறவைகளின் இறகுகளை காதுக்குள்விட்டு குடைவது போன்றவற்றை செய்கின்றனர். இவை அனைத்துமே முற்றிலும் தவறானது.

காதுகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற பலரும் பல்வேறு வழிகளை கையாண்டாலும், அதிகளவில் கையாள்வது இயர்பட்ஸை வைத்து சுத்தம் செய்வதுதான். அதிலும், சிலர், நான் காட்டன் இயர்பட்ஸைதான் பயன்படுத்துகிறேன். சிலர், விலையுர்ந்த பட்ஸை பயன்படுத்துகிறேன் என்று சொல்லுவார்கள். ஆனால், எவ்வளவுதான் விலையுர்ந்த இயர்பட்ஸாக இருந்தாலும், அதிலும் காதை சுத்தம் செய்வது ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கின்றன. ஏனென்றால், காதுகளில் இயர்பட்ஸ் பயன்படுத்தும்போது, காதில் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி செவித்தன்மை பாதிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நாம் சாப்பிடும் உணவின் சுவை அறிவதற்கு காதின் நடுப்பகுதியில் செல்லும் நரம்புதான் உதவுகிறது. அதில், இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் சேதம் ஏற்பட்டால், சுவையை அறிய முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, காதில் அழுக்குகள் சேரும்போது, காதே தன்னைதானே சுத்தம் செய்யும் வகையில், அந்த அழுக்குகளை வெளியே தள்ளிவிடும். எனவே, காதை சுத்தம் செய்ய நாம் எந்த முயற்சியும் செய்ய தேவையில்லை. அதனை மீறி காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்று, இயர்பட்ஸை பயன்படுத்தும்போது, அது காதில்

ஆழமாக செருகிவிட்டால், வெட்டுக்கள் அல்லது கண்ணீரை ஏற்படுத்தும், இது வலி மற்றும் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும்.மேலும், அடிக்கடி காதில் இயர்பட்ஸ் போடும் வழக்கம் உள்ளவர்களுக்கு, செவிப்பறை துளையை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக காது கேளாமை அல்லது உங்கள் காதுகளில் சத்தம் ஏற்படலாம். மேலும், இது நிரந்தர காது கேளாமைக்கும் வழிவகுக்கும்.

இந்த அபாயங்களைத் தவிர்க்க, பருத்தி இயர் பட்ஸ்களாக இருந்தாலும், அவற்றை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அப்படியே பயன்படுத்தினால் கவனமாகவும் வெளிப்புறமாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு காது சுத்தம் செய்ய, பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். இது காதுகளை எளிதாக சுத்தம் செய்கிறது. காதில் 2-3 சொட்டு எண்ணெய் வைத்து, சுத்தமான துணியால் காதை சுத்தம் செய்தால் போதும். குழந்தைகளுக்கு இயர் பட்ஸ் கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது.

தொகுப்பு: ஸ்ரீ

Related posts

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறு!

தைராய்டு பிரச்னைகளும் தீர்வும்!

முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்!