இதுவரை தொழிலதிபர்கள் ₹7.6 கோடி நன்கொடை தி.நகரில் வெங்கடேஸ்வரா கோயில் கட்ட 6 மாதத்தில் பூமி பூஜை: தமிழ்நாடு-புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தகவல்

சென்னை: தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான  வெங்கடேஸ்வரா கோயில் கட்ட இதுவரை தொழிலதிபர்கள் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலரும் ரூ.7.6 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். 6 மாதத்தில் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுவின் தலைவர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த தாயார் கோயில் கட்டப்பட்டு, கடந்த மார்ச் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலுக்கு தினமும் பத்தாயிரம் பேர் வரை வந்து தரிசனம் செய்கிறார்கள். தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலையும், தாயார் கோயில் போல் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இட பற்றாக்குறை காரணமாக திட்டத்தை துவங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

தற்போது, கோயில் அருகில் இருந்து மூன்று கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நன்கொடை மூலம் அந்த இடத்துக்கு 14 கோடி கொடுத்து வாங்கினோம். இதற்காக பக்தர்கள் பலரும் முன்வந்து நன்கொடை கொடுத்தனர். அதில், நன்கொடை 1 கோடி, ஏ.சி. சண்முகம் 1 கோடி, டி.வி.எஸ் குழுமம் சீனிவாசன் 1 கோடி, ஐசரி கணேஷ் 50 லட்சம் என மொத்தமாக தற்போது வரை 7 கோடியே 60 லட்சம் வந்துள்ளது. 6 மாத காலத்திற்குள் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்படும். கோயில் கட்டுமான செலவை தேவஸ்தானம் பார்த்துக் கொள்ளும். இடம் வாங்க தான் நன்கொடை வாங்கப்படுகிறது. தனிநபர் பெயரில் நன்கொடை வாங்குவதில்லை. 1 கோடி முதல் ஒரு லட்சம் வரை நன்கொடை கொடுப்பவர்களுக்கான சிறப்பு திட்டம் உள்ளது. இடம் வாங்க நன்கொடையாக 1 ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம். ஒரு ரூபாய் என்றாலும், கோடி என்றாலும் ஒன்று தான்.

பழங்கால முறையில் கோயில் கட்டப்படும்: கோயில் முழுவதுமாக புனரமைக்கப்பட்டு, புதிய கோயிலாக கட்டப்படும். சிமென்ட் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க ராசிபுரத்தில் இருந்து கொண்டு வரப்படும் கற்களை கொண்டு கோயில் கட்டப்பட உள்ளது. தற்போது 3 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த திட்டத்துக்காக மொத்தமாக 11 கிரவுண்ட் வாங்க 30 கோடி தேவைப்படும். கன்னியாகுமரி முதல் ஜம்மு வரை கோயில்: ஜம்முவில் உள்ள காட்ரா பகுதியில் கட்டப்பட்டுள்ள கோயிலுக்கு வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மும்பையில் வரும் 7ம் தேதி கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து அமராவதி, ஐதராபாத், உளுந்தூர்பேட்டை, பெங்களூரு, வேலூர் ஆகிய இடங்களில் கோயில் கட்டப்பட உள்ளது. ஒடிசாவில் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது.

புதிய திருமண மண்டபம்: ராயப்பேட்டை மற்றும் மதுரையில் தேவஸ்தானம் சார்பில் புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட உள்ளது. ராயப்பேட்டையில் நியூ கல்லூரி எதிரே திருமண மண்டபம் வரவுள்ளது. ஏழை மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த வாடகைக்கு விடப்படும். தேவஸ்தானம் நினைத்தால் இலவசமாக கூட அதனை வழங்கும். இவ்வாறு ஏ.ஜெ.சேகர் ரெட்டி கூறினார். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக தலைவர் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை