திருத்தணியில் 2.42 கோடி மதிப்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருவள்ளூர்: திருத்தணியில் ரூ.2.42 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலக புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். திருத்தணியில் ரூ.2.42 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சி.சா.சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அ.சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், இணை போக்குவரத்து ஆணையர் ஏ.ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திருவள்ளூர் கோ.மோகன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார். பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியதாவது: மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் திருத்தணி போக்குவரத்து துறைக்கு சொந்தமான திருவள்ளுர், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருத்தணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவின்படி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, லஷ்மாபுரம் ஊராட்சியில் 1.22 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2.42 கோடி செலவில் திருத்தணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

புதிய திருத்தணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தின் மூலம் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், புதிய வாகன பதிவு, வாகன உரிமை மாற்றம், தகுதிச்சான்று வழங்குதல், அனுமதிச்சீட்டு பணிகள் மற்றும் இணையதளம் மூலம் வரி செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதால் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட வட்டங்களில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது 15,000 பேருந்துகள் வாங்கப்பட்டன.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 10,000 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் 3,600 பேருந்துகளை வாங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் விரைவில் 4,000 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் புதிதாக பேருந்துகள் வாங்கி விடப்பட்டு வருகின்றன. நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது போல 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

மேலும் அதிமுக ஆட்சியாளர்களால் கடந்த ஆட்சிகாலத்தில் வாங்கப்பட்ட 7,000 டப்பா பேருந்துகள் விரைவில் மாற்றப்படும். கூடுதலாக பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 92 பயனாளிகளுக்கு ரூ.92.47 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 2 சக்கர வாகனத்தினை அமைச்சர்கள் வழங்கினர். திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பூந்தமல்லி எம்.ஸ்ரீதரன், சென்னை வடக்கு கே.பி.ஜெயக்குமார், சென்னை கிழக்கு ஸ்ரீதரன், சென்னை மையம் மாதவன், சென்னை வடகிழக்கு வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திருத்தணி ராஜராஜேஸ்வரி, பூந்தமல்லி காவேரி, சுரேஷ்குமார், ரெட்டில்ஸ் கருப்பையா, சோதனை சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திருத்தணி என்.சுமேஷ் நாராயணன்,

செந்தில் செல்வம், பாலவாக்கம் ஹேமலதா, சந்திரன், ஒன்றிய நகர செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், எஸ்.மகாலிங்கம், ஆரத்தி ரவி, சி.ஜெ.சீனிவாசன், வக்கீல் கிஷோர், பொன் பாண்டியன், ஒன்றிய குழு துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம், ரவிச்சந்திரன், விஜயகுமாரி சரவணன், மோதிலால், லக்ஷ்மாபுரம் வேலன், குமார், ஒப்பந்ததாரர் அரக்கோணம் கே.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!

உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு