தாவரவியல் பூங்கா தொட்டிகளில் மலர்கள் பூத்தாச்சு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 45 ஆயிரம் மலர் தொட்டிகளில் தற்போது பெரும்பாலான தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே செல்கிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே மாதம் 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் பராமரிக்கப்பட்டு வருகிறது.எனினும், போதுமான மழை பெய்யாத நிலையில், இன்னும் புல்வெளிகள் பசுமை திரும்பாமல் காட்சியளிக்கிறது.

நாள் தோறும் புல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதனால், புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், அருகில் உள்ள சிறிய புல் மைதானங்களில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தும், விளையாடியும் வருகின்றனர்.தற்போது தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 45 ஆயிரம் தொட்டிகளில் பெரும்பாலான மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன.

குறிப்பாக மேரிகோல்டு,டேலியா,சால்வியா,டெய்சி மற்றும் பேன்சி போன்ற மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.தற்போது இந்த மலர் தொட்டிகள் மாடங்களில் அடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளை தொலைவில் இருந்தே சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related posts

உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து

சேலத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி

ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா?: மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி