பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் ரூ.100 கோடி சொத்தை சார்பதிவாளர் மூலம் மோசடி: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆற்காட் ரோட்டில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை ராதாபுரம் சார்பதிவாளர் மூலம் மோசடி செய்துள்ளார். இந்த மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு மார்ச் மாதம் 12ம் தேதி அனுப்பியது. இந்த புகாரை விசாரித்த திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் இந்த பதிவு ரத்து செய்யப்படு்வதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவித்துள்ளார்.

இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் மூர்த்தி இந்த புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். பத்திரப்பதிவு துறையில் அறப்போர் இயக்கம் பள்ளிகரணை சதுப்பு நில ஊழல், பரந்தூர் நில ஊழல், பிஎசிஎல் நில மோசடி ஊழல், திருச்சி ஜெ ஜெ கல்லூரி நிலத்தை மோசடியாக காஞ்சிபுரத்தில் பத்திரப்பதிவு செய்த மோசடி, ஜெ ஜெ கல்லூரி 15.04 ஏக்கர் நீர்நிலையை பதிவு செய்த மோசடி மற்றும் நயினார் நாகேந்திரன் மகன் செய்த 100 கோடி மதிப்பு சென்னை நிலத்தை ராதாபுரத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது என பல புகார்கள் கொடுத்துள்ளது. அனைத்தின் மீதும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேகப்படுத்த வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்