இது ஒரு அழகான பயணத்தின் ஆரம்பம்: மகனுக்கு டெண்டுல்கர் உருக்கமான டுவிட்

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். 23 வயது இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் கீழ் வரிசையில் களமிறங்கக்கூடிய பேட்ஸ்மேன். 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்ட அர்ஜுன், துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டதால் அந்த சீசனில் இருந்து மொத்தமாக விலகினார்.

2022ம் ஆண்டு நடந்த ஏலத்தில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் சென்ற ஆண்டு இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனில் முதல் 3 போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்தபோட்டியில் அர்ஜூன் அறிமுகமானார். அவருக்கு தொப்பியை ரோகித்சர்மா வழங்கினார். இப்போட்டியில் நன்றாக பந்துவீசினாலும் 2 ஓவரில் 17 ரன் கொடுத்த அர்ஜூன் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மகனுக்கு தந்தை என்கிற முறையில் சச்சின் டெண்டுல்கர் உருக்கமான வாழ்த்து செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். “இன்று கிரிக்கெட்டில் இன்னொரு முக்கியமான அடியை எடுத்து வைத்திருக்கிறார். கிரிக்கெட்டிற்கு உரிய மரியாதையை நீ கொடுத்தால், பதிலுக்கு கிரிக்கெட்டும் உனக்கு அனைத்தையும் கொடுக்கும். உன்னுடைய தந்தையாக மற்றும் கிரிக்கெட்டை நேசிக்கக்கூடிய ஒருவனாக இதை நீ செய்வாய் என்று நம்புகிறேன். இந்த இடத்தை அடைவதற்கு நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதே உழைப்பு இன்னும் தொடர்ந்து செய்வாய் என்றும் நினைக்கிறேன். இது ஒரு அழகான பயணத்தின் ஆரம்பம். வாழ்த்துகள்” என்று பதிவிட்டு உள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்