ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; திற்பரப்பு அருவியில் குளிக்க 3வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குலசேகரம்: குலசேகரம் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திற்பரப்பு. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தி பாய்ந்தோடும் கோதையாறு, திற்பரப்பு பகுதியில் அருவியாக கொட்டுகிறது. அருவியின் மேல்பகுதியில் கோதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு படகு சவாரியும் மேற்கொள்ளப்படுகிறது. பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரும் கோதையாற்றில் தான் பாய்ந்து செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலையோர பகுதிகள், குலசேகரத்தையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் எதிரொலியாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடந்த சில நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒன்றிரண்டு நாள் மட்டும் தடை விலக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் கடந்த 19ம் தேதி முதல் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மழைவெள்ளம் குறையாததால் 3வது நாளாக இன்றும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கமுடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்