குளித்தலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிரடி நடவடிக்கை-களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

குளித்தலை : குளித்தலை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க இருவழிச் சாலை மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலை துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சியில் இருந்து கரூர் 72 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அதில் திருச்சி மெயின்காட் கேட், குடமுருட்டி பாலம், முத்தரசநல்லூர், ஜீயபுரம், எலமனூர், பெருகமணி, சிறுகமணி, பெட்டவாய்த்தலை, மருதூர், ராஜேந்திரம், தண்ணீர் பள்ளி, பெரிய பாலம், பஸ் நிலையம், கடம்பர் கோவில், சுங்க கேட், வதியம் லாலாபேட்டை, சிந்தலவாடி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், மனவாசி, புலியூர், பசுபதிபாளையம் வழியாக கரூர் நகரை சென்றடைகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து நெரிசலை போக்க கரூர் திருச்சி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. தற்பொழுது உள்ளூர் சாலை வழியாக செல்லும் பேருந்துகள், வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் கூடுதலாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதைபோக்கும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் திருச்சியில் இருந்து பெட்டவாய்த்தலை வரை இருவழிச்சாலை ஆக அமைக்க சாலை இருபுறமும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி புதியதாக இருவழிச்சாலை அமைக்கப்பட்டு தற்பொழுது எந்த சிரமமும் இன்றி வாகனங்கள் சென்று வருவதற்கு எளிதாக இருக்கின்றது.

அதன்அடிப்படையில் குளித்தலை கோட்டை நெடுஞ்சாலைத்துறை பெரிய பாலத்தில் இருந்து சுங்க கேட் எல்ஆர்எஸ் பாலம் வரை சாலை இருபுறமும் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றுவதற்கு முதல் கட்டமாக குறியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இப்பணிகள் நடைபெற்று ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இரு வழிச்சாலை பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளித்தலை நகரத்தில் இதுபோன்று தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நிள அளவை அதிகாரிகள் வந்து குறியீடு போடுவதும், ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதும் நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. புதிய மக்கள் தொகைக்கு ஏற்பவும், வாகன போக்குவரத்துக்கு ஏற்பவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சீராக குளித்தலையில் நெடுஞ்சாலைத்துறை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகன போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

மே-18: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி