காவல் நிலையத்திற்குள் புகுந்து வழக்கை வாபஸ் பெற கோரி பெண் காவலருக்கு மிரட்டல்: விருகம்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: காவல் நிலையத்திற்குள் புகுந்து, வழக்கை வாபஸ் பெற கோரி, பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலிகிராமம் தசரதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு இரு வாலிபர்கள் பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர், இரவு ஒரு கும்பல் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கணினி அறையில் பணியில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் சென்று, விருகம்பாக்கம் விஐபி அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். மேலும் உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறிய அந்த கும்பல், பெண் காவலரை அழைத்து ஏகாம்பரம், பிரவீன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அவர்களுக்கு எதிராக நீ சாட்சி அளிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்தனர். அதுமட்டுமின்றி நீ அளித்த பாலியல் புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஓடிவந்து அந்த கும்பலை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் விஐபியும், விருகம்பாக்கம் காவல் ஆய்வாளரை செல்போனில் தொடர்பு கொண்டு, பெண் காவலரை சமாதானமாக போக சொல்லுங்கள், வீண் பிரச்னை வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பெண் காவலரின் செல்போன் எண்ணை வாங்கி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (எ) வாட்டர் விஜய் தலைமையில் வந்த கும்பல் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பெண் காவலரை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டது ஏன்?.. தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா?

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு

நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு