கடந்த ஆண்டை விட ரூபாய் நோட்டு புழக்கம் 4.4 சதவீதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை; கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூபாய் நோட்டு புழக்கம் 4.4 சதவீதம் அதிகரித்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் வருமாறு; கடந்த 2021-22ம் நிதி ஆண்டை கணக்கிடுகையில் இந்த நிதி ஆண்டில் ரூபாய் நோட்டு மதிப்பு மற்றும் ரூபாய் நோட்டு புழக்கம் ஆகியவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 7.8 சதவீதம் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், 4.4 சதவீத அதிக எண்ணிக்கையிலான நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. மார்ச் 31ம் தேதி கணக்குப்படி மொத்த ரூபாய் நோட்டு மதிப்பில் 87.9 சதவீதம் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் இருந்தன.

கடந்த ஆண்டு 87.1 சதவீதம் ஆகும். எண்ணிக்கை அடிப்படையில் ரூ.500 நோட்டுகள் 37.9 சதவீதமும், ரூ.10 நோட்டுகள் 19.2 சதவீதமும் புழக்கத்தில் இருந்தன. ரூ.500 நோட்டுகள் 5,16,338 எண்ணிக்கையில் புழக்கத்தில் உள்ளன. இதன் மதிப்பு ரூ.25,81,690 கோடி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.4,55,466 லட்சம் எண்ணிக்கையில் புழக்கத்தில் இருந்தது. இதே போல் ரூ.2000 நோட்டுகள் 4,55,468 புழக்கத்தில் இருந்தது. இதன் மதிப்பு ரூ.3,62,220 கோடி.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள இ-ரூபாய்-மொத்த விற்பனை ரூ.10.69 கோடி. இ-ரூபாய்-சில்லறை விற்பனையின் மதிப்பு ரூ.5.70 கோடியாக இருந்தது. ரிசர்வ் வங்கி கடந்த நிதியாண்டில் 4,824 லட்சம் அழுக்கடைந்த ரூ.2,000 நோட்டுகளை அப்புறப்படுத்தியது. அதற்கு முந்தைய ஆண்டில் 3,847 நோட்டுகளை அகற்றியது. 2021-22ம் ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.500 நோட்டுகளில் 14.4 சதவீதம் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் வங்கித் துறையில் மோசடிகளின் எண்ணிக்கை 13,530 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மோசடி தொகை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து ரூ. 30,252 கோடியாக உள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் (கார்டு/இன்டர்நெட்) வகையிலேயே மோசடிகள் அதிகம் நடந்துள்ளன. 2021-22ல் மொத்தம் 9,097 மோசடிகள் நடந்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டில், மோசடிகளின் எண்ணிக்கை 7,338 ஆகவும், சம்பந்தப்பட்ட தொகை ரூ.1,32,389 கோடியாகவும் இருந்தது. இவை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் நடந்த மோசடி குறித்த தகவல் ஆகும். 2022-23ம் ஆண்டில், பொதுத்துறை வங்கிகள் ரூ.21,125 கோடி சம்பந்தப்பட்ட 3,405 மோசடிகளைப் பதிவு செய்துள்ளன, தனியார் வங்கிகள் ரூ.8,727 கோடி சம்பந்தப்பட்ட 8,932 வழக்குகளைப் பதிவு செய்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர்களின் போது பரிவர்த்தனைக்கு புதிய வசதி
பேரழிவு நிகழ்வுகளின் போது முக்கியமான பரிவர்த்தனைகளுக்கு புதிய வசதியை அமல்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. லைட் வெயிட் போர்ட்டபிள் பேமென்ட் சிஸ்டம் (எல்.பி.எஸ்.எஸ்) என்ற அந்த வசதி வழக்கமான தொழில்நுட்பங்களிலிருந்து தனித்து இயக்க முடியும். குறைந்தபட்ச ஊழியர்களால் எங்கிருந்தும் இயக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி இருப்பு ₹63.45 லட்சம் கோடியாக உயர்வு
ரிசர்வ் வங்கியின் இருப்பு இந்த நிதியாண்டில் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.63.45 லட்சம் கோடியாக உள்ளது. 2022 மார்ச் 31ம் தேதி கணக்குப்படி ரூ.61,90,302.27 கோடியிலிருந்து 2.50 சதவீதம் அதிகரித்து 2023 மார்ச் 31ல் இருப்பு ரூ.63,44,756.24 கோடியாக உள்ளது.

Related posts

மாருதி பிரான்க்ஸ் டெல்டா பிளஸ்

பிஎம்டபிள்யூ 1000 எக்ஸ்ஆர்

டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி