ஆருத்ரா இயக்குநரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.13 கோடி பெற்ற பா.ஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்: சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு

சென்னை: சென்னையை சேர்ந்த ஆருத்ரா நிதி நிறுவனத்துக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிபேட்டை என தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. தங்களிடம் முதலீடு செய்தால், 25 முதல் 35 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என்று பொதுமக்களிடம் டெபாசிட் வசூலித்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களில் பலருக்கு ஆருத்ரா நிதி நிறுவனம் வட்டி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், ஒரு நேரத்தில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனால், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி ‘ஆருத்ரா நிதி நிறுவன’ மோசடி வழக்கு மாநில பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அவர்களின் முதல்கட்ட விசாரணையில், ஆருத்ரா நிறுவனம் 1.09 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து ஆருத்ரா மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர் ராஜசேகர், அவரது மனைவியும் இயக்குநரான உஷா ராஜசேகர் மற்றும் நிர்வாக குழுவில் உள்ள 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஸ், மாலதி, நாகராஜ், ரூசோ உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர்.

இதனால் அவர்களை பிடிக்க இன்டர்போல் மூலம் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாராயணி, தீபக் கோவிந்தபிரசாத், ரூமேஸ்குமார் ஆகியோர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆருத்ரா இயக்குநர்களின் வீடுகள், ஆபிஸ், ஏஜென்டுகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, ரூ.6.35 கோடி மற்றும் ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட் ஆகியோரின் ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் 103 அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், கைதான ரூசோவிடம் நடத்திய விசாரணையில், வழக்கில் இருந்து விடுவிக்க நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரான பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷிடம் ரூ.13 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், ஆர்.கே.சுரேஷ்- ரூசோ ஆகியோர் மோசடி பணத்தில் திரைப்படம் தயாரித்துள்ளனர். இதற்காக ரூசோ தனது வங்கி கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேசுக்கு கோடி கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளார். ரூசோ கைதானதை தொடர்ந்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஆர்.கே.சுரேஷ் தனது குடும்பத்துடன் துபாயில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அதைதொடர்ந்து ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் நடிகர் ஆர்.கே.சுரேசின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் எத்தனை கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் ஆருத்ரா மோசடி கும்பலிடம் இருந்து பெற்ற ரூ.13 கோடி பணத்திற்கு அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஜாமீன் கோரி மனு

ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை கொஞ்ச நாட்கள் யாரும் பார்க்க முடியாது: விராட் கோலி பேட்டி