மாமல்லபுரம் சுற்றுலா தளத்திற்கு செல்ல வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க ரூ.1.93 கோடிக்கு ஏலம்: பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலா தளத்திற்கு செல்ல பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க ஜிஎஸ்டி உட்பட ரூ.1 கோடியே 93 லட்சத்து 70க்கு ஏலம் விடப்பட்டது.
மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பஸ், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். அப்படி வரும் வாகனங்களுக்கு இசிஆர் நுழைவு பகுதி, பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே ஆகிய இரண்டு இடங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஏலம் விடாமல் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமே வசூல் செய்து வந்தது.

இதையடுத்து, கடந்தாண்டு ‘செஸ் ஒலிம்பியாட் போட்டி’ நடந்த நிலையில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பேரூராட்சி நிர்வாகமே நுழைவு கட்டணத்தை வசூலித்தது. இந்நிலையில், வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் நேற்று ஏலம் விட்டது. இதில், மாமல்லபுரத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் ஜிஎஸ்டி உட்பட ரூ.1 கோடியே 93 லட்சத்து 70 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது. சுற்றுலா பயணிகளிடம் அடாவடியாக நடந்து கொள்ளக்கூடாது. வெளி நாட்டவர், வெளி மாநிலத்தவர் அதிகம் வரும் சுற்றுலா பகுதி என்பதால் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்கள் முறையான சீருடை, அடையாள அட்டை மற்றும் பல மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்