வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி விஷம் கொடுத்து கொல்ல முயற்சி? நடிகர் மன்சூர் அலிகான் பகீர்

சென்னை: வேலூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகரும், சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தன்னை விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார். அவர் கடந்த 10 நாட்களாக வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜ அரசுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில், தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி நடந்துள்ளதாக மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இன்று தேர்தல் நடைபெற உள்ளதால் வேலூர் தொகுதிக்கு செல்ல உள்ளதாக மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு

முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு

ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு