தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது ஒன்றிய அரசு தடுக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு ஆளாவதை தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றிய பா.ஜ. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி உரிய தீர்வு காண வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த எந்தவிதமான முயற்சிகளையும் ஒன்றிய பாஜ அரசு செய்ய முன்வரவில்லை. இந்த பிரச்னைக்கான உரிய தீர்வுகள் காணப்படாத நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவில்லையெனில் கடும் விளைவுகளை ஒன்றிய பா.ஜ. அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்