மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அஸ்தினாபுரத்தில் ரூ.81 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம், நிழற்குடைகள்: பல்லாவரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாம்பரம்: அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தின் நிலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, இந்த நிலத்தை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற தீர்ப்பில் நிலம் அரசுக்கு சொந்தமானது என உறுதியானது.

இதையடுத்து, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.60 லட்சம் மதிப்பில், அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான பணி தொடங்கியது. அதே பகுதியில் காயத்ரி நகர், குமரகுன்றம், ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள கோரல் அடுக்குமாடி குடியிருப்பு அருகே என 3 இடங்களில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் செலவில் பேருந்து பயணிகளுக்கான நிழற்குடை அமைப்பதற்கும் இ.கருணாநிதி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் மற்றும் 3 பேருந்து நிழற்குடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு, ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிழற்குடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்வில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி கருணாகரன், சரண்யா மதுரைவீரன், சரஸ்வதி சந்திரசேகர், சங்கீதா விஜய், பகுதி செயலாளர் கருணாகரன், சமூக ஆர்வலர் சந்தானம், நல சங்க நிர்வாகி முருகையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு

டிராக்டரில் உணவு தேடிய யானை: வீடியோ வைரல்