சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு

சென்னை: கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தின் போது உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இதனிடையே வழக்கை விரிவாக விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவர் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனக்கூறி விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விரிவாக விசாரணை நடத்தியது. அதில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதை அடிப்படையாக கொண்டு தான் விடுதலை செய்தது. மேலும் முன்னதாகவே சொத்து குறித்த முழு விவரங்களையும் தெரிவித்திருந்தோம். ஆனால் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளாமல், எங்களை குற்றவாளி என்றும், 2 பேருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனை ரத்து செய்து, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் அடுத்த ஒரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்