ஆருத்ரா நிதிநிறுவன இயக்குநர்கள் துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்: இன்டர்போல் உதவியுடன் பிடிக்க போலீசார் தீவிரம்

சென்னை:ஆருத்ரா நிதிநிறுவன இயக்குநர்கள் துபாயில் ரூ.500 கோடி பதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்டர்போல் உதவியுடன் அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி என கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாஜ நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.  அவர் ஆஜராகாததால் சொத்துகளை முடக்க முடிவு செய்துள்ளனர். தற்போது, அவர் துபாயில் இருப்பதால், அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்து வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் அந்நிறுவன இயக்குனர்கள் ரூ.500 கோடி வரை ஐக்கிய அமீரக நாட்டில் உள்ள துபாயில் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். துபாயில் உள்ள சொத்துகளை முடக்க துபாய் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தற்போது வரை மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கிய பல கோடி மதிப்பிலான 127 சொத்துகளை கண்டறிந்து, அதில் 60 சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.102 கோடி இருந்த வங்கி கணக்கை முடக்கி, ரூ.6.5 கோடி பணம், 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இன்டர்போல் உதவியுடன் துபாயில் பதுங்கி உள்ள இயக்குனர்களை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்