ஆர்ஜிதம் செய்யாத நிலத்தில் சாலை அமைத்தது எப்படி? விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ஆர்ஜிதம் செய்யாத நிலத்தில் எப்படி சாலை அமைக்கப்பட்டது என்பது குறித்து, விருதுநகர் கலெக்டர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த ரமேஷ், காராளம் மற்றும் மும்மூர்த்தி ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், காரியாபட்டி தாலுகா அரசகுளம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய பட்டா நிலம் உள்ளது. அதில் எந்தவித அறிவுறுத்தலுமின்றி சாலை அமைத்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தலா ரூ.3.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், பட்டா நிலத்தில் சாலை அமைக்கப்பட்டது குறித்து கலெக்டர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் ஆஜராகி, ‘‘பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று நிலவியல் பாதையான அந்த இடத்தில் பொது நலன் கருதி தான் சாலை அமைக்கப்பட்டது’’ என்றார். இதையடுத்து, சட்டப்படி ஆர்ஜிதம் செய்யாத நிலத்தில் எப்படி சாலை அமைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கலெக்டர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 20க்கு தள்ளி வைத்தனர்.

Related posts

மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்

மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்